search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் அறைகள்"

    புழல் சிறையில் மீண்டும் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகள் அறைகளில் இருந்து பிரியாணி அரிசி, டெலிவிஷன் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். #PuzhalJail #PuzhalPrisoners #TrichyCentralJail
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது அம்பலமாகி உள்ளது. புழல் சிறையில் கைதிகள் தங்களது செல்போனில் எடுத்த புகைப்படங்கள் மூலமாக இது வெட்டவெளிச்சமானது. இது தொடர்பான புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சிறையில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளை தாண்டி எப்போதுமே கைதிகள் செல்போனை பயன்படுத்துவது என்பது நீண்ட நாட்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சட்ட விரோத செயல்களில் கைதிகள் தாராளமாக ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து புழல் சிறையில் கடந்த 13-ந்தேதி அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா மற்றும் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்த 2 நாட்களும் இந்த சோதனை தொடர்ந்தது. 14 மற்றும் 15-ந்தேதிகளில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மிக்சி, சமையல் பாத்திரங்கள், பழச்சாறு பிழியும் கருவிகள், சிகரெட், பீடி பண்டல்கள் மற்றும் திரைச்சீலைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தண்டனை சிறை வளாகத்தில் ஏ பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள 5 கைதிகள் மற்ற சிலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் அறையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஒரே வாரத்தில் 4-வது முறையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்து இயக்க தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது அறைகளில், சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்கு இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதையெல்லாம் மீறி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இந்த சோதனையிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோப்புப்படம்

    பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது அறைகளில் இருந்து 2 தொலைக்காட்சிகள், 20 கிலோ பிரியாணி அரிசி, 5 கிலோ பருப்பு, 2 கிலோ காய்கறி, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த பொருட்கள் அனைத்தும் சிறை வளாகத்தில் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவர் மீதும் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் கொலை வழக்கு உள்ளது. வேலூர் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, மதுரை பால்காரர் ஆகியோர் கொலை வழக்கில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாகி இருக்கும் கைதிகளும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள சொகுசு வசதிகள் குறித்து கடந்த வாரம் விளக்கம் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஏ வகுப்பு கைதிகளுக்கு சிறை துறை அனுமதியுடன் சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இந்த நிலையில் ஏ வகுப்புக்கு தொடர்பு இல்லாத சிறைப் பகுதியில் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

    தண்டனை சிறை பகுதிகளில் சோதனை நடத்தியுள்ள அதிகாரிகள், முதல் நிலை பாதுகாப்பு பிரிவு மற்றும் உயர் பாதுகாப்பு பிரிவு பகுதிகளில் இன்னும் சோதனை நடத்தவில்லை. இந்த பிளாக்குகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்தது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைசாலைகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் நேற்று காலையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 75 பேர் கொண்ட தனிப்படை சோதனை நடத்தியது.

    சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 2 இரும்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டன. இதே போல மற்ற சிறைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனையும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு திருச்சி மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் சிகாமணி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு பிளாக்குகளாக சென்று சோதனை நடந்தது. கைதிகள் பயன்படுத்திய கழிவறைகளிலும், மணல் பகுதி, மரங்கள், சமையல் அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அப்போது சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

    இதே போன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை சோதனை நடத்தினர். #PuzhalJail #PuzhalPrisoners #TrichyCentralJail
    ×